கல்வியியல் ஓர் அறிமுகம் |
நூலாசிரியரான பேராசிரியர் சதாசிவம் முத்துலிங்கம் ஒரு மூத்த தலைமுறைக் கல்வியாளர். முதலில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கல்வியியல் துறையிலும் பணியாற்றியவர். குறிப்பாகப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆசிரியர் கல்வியாளராகத் திகழ்ந்த பேராசிரியர் அவர்கள் பிரதானமாகக் கல்வி உளவியல், கல்விப் புள்ளியியலும் மதிப்பீடும், விஞ்ஞானக் கல்வி கற்பிக்கும் முறைகள் ஆகிய பாடங்களைத் துறைப்போகக் கற்பித்தார்கள். நான் உட்பட இன்றைய தலைமுறையினரான பல கல்வியியல் பேராசிரியர்களும் மூத்த கல்வியாளர்களும் அன்னாரிடம் உயர்கல்வி பயின்றவர்கள். இறுதிக் காலத்தில் கனடா சென்று வாழ்ந்து அங்கு காலமானவர்.
இன்று கல்வியியல் நூல்கள் ஏராளம் வெளிவந்துவிட்டன. எமது மதிப்பீட்டில் இருநூறு நூல்களாவது வெளியிடப்பட்டிருக்கலாம். இலங்கையில் வெளிவந்துள்ள கல்வியியல் நூல்கள் பற்றிய ஒரு நூற்பட்டியல் ஒன்று இன்றைய ஒரு முக்கிய தேவை என்பது வேறொரு விடயம். அதில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய விடயம் 1970களில் தமிழ்மொழியில் கல்வியியல் நூல்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, இந்நூலை எழுதி வெளியிட்டவர் பேராசிரியர் அவர்கள். இன்று கல்வியியல் எழுத்துப்பணி விரிவான முறையில் நடைபெறுகின்றதென்றால் அப்பணிக்கு ஒரு முன்னோடியாக அமைந்தவர் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
|